ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா!! நீர்கொழும்பில் பாதுகாப்புத் தீவிரம்!

நீர்கொழும்பு நகரில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிர்கொழும்பு பழைய சிலாபம் வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியாசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த வைத்தியசாலை மூடப்பட்டது.

தொடர்ந்து அவரது குடும்ப அங்கத்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லபட்டு கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதியாகியுள்ளது.பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருமே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நீர்கொழும்பு நகரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. பல்லன்சேனை, கட்டுவபிட்டிய, முன்னக்கரை, பிட்டிபனை, சாந்த ஜோசப் வீதி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரண்டு நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை பரிசோதனையின் போது தெரிய வந்துள்ளது. இன்று கிடைக்கப்பெற்ற கொரோனா பரிசோதனை அறிக்கையில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுகிறது. பிரதான பஸ் நிலையத்திற்கு குறைந்த எண்ணிக்கையான பயணிகளே வருகை தருவதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணபபடவதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டிச் சாரதிகள், மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, பாதுகாப்புக் கருதி வார இறுதிச் சந்தை. இரவுச் சந்தை என்பவற்றை மறு அறிவத்தல் வரை நிறுத்துவதற்கு பொது சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் உயர்தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களை தினமும் கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கும் பொது சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.