ஐ.பி.எல்: கொல்கத்தா அணியை புரட்டிப் போட்டது பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ்..!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 28ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 82 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில், ஆரோன் பின்ஞ் 47 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 32 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும், ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், பிரசீத் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பெங்களூர் அணி, 82 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்தது.இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 34 ஓட்டங்களையும் ஆந்ரே ரஸ்ஸல் மற்றும் ராகுல் திரிபத்தி ஆகியோர் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பெங்களூர் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் மோரிஸ் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி, மொஹமட் சிராஜ், யுஸ்வேந்திர சஹால், இசுரு உதான ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஏபி டிவில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

2