சந்தேகத்தின் பேரில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர் திடீர் மரணம்..!!

கொரோனா நோயாளியுடன் பேருந்தில் புதல்வி பயணித்ததால், சந்தேகத்தின் பேரில் மொனராகலை மெதகம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில்தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மொனராகலை பொல்கல்ல -வல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொனராகலை மருத்துவமனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இருந்து மொனராகலை வரை தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கடந்த 4 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.உயிரிழந்த நபரின் புதல்வியும் இதே பேருந்தில் பயணித்துள்ளதாக கண்டறியப்பட்டதுடன் பின்னர் சுகாதார அதிகாரிகள், முழு குடும்பத்தையும் அவர்களின் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் தனிமைப்பட்டிருந்த 70 வயதான நபருக்கு நேற்றிரவு 7 மணியளவில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.