ஐ.சி.பி.ரி உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் கொரோனா.!!

கொழும்பிலுள்ள ஐ.சி.பி.ரி கெம்பஸ் என்ற உயர்கல்வி நிறுவனத்தில் கல்விபயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இதுவிடயம் தொடர்பில் ஐ.சி.பி.ரி கெம்பஸ் என்ற தனியார் உயர்கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி ஐ.சி.பி.ரி கெம்பஸில் கல்விகற்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர் கடந்த 4 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பிலுள்ள மேற்படி உயர்கல்வி நிறுவனத்திற்கு வருகைதந்திருக்கின்றார்.வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேற்படி மாணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கும் ஐ.சி.பி.ரி கெம்பஸ், குறித்த மாணவரின் வகுப்பைச் சேர்ந்த ஏனைய மாணவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் உடனடியாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்திருக்கிறது.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லது அதற்குப் பின்னர் கொழும்பிலுள்ள ஐ.சி.பி.ரி கெம்பஸ் என்ற உயர்கல்வி நிறுவனத்திற்கு எவரேனும் வருகைதந்திருப்பின், உடனடியாக அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு இந்நிறுவனம் வலியுறுத்தியிருக்கிறது.