முன்னரை விட தற்போது வேகமாகப் பரவும் கொரோனா!! தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை.!!

முன்னைய காலத்தை காட்டிலும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் பரவல் வேகம் அதிகமென்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று சமூக மட்டத்தில் வேகமாக பரவிவருது தொடர்பில் இன்றைய தினம் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தகவல் வெளியிட்ட அவர்,முன்னைய காலத்தை காட்டிலும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. வைரஸின் முறை மாற்றங்கள் இந்த வகை சூழ்நிலைக்கு வழிவகுத்திருக்கலாம். இதன்காரணமாக இந்த வைரஸினால் ஒருவரிடம் இருந்து மற்றவர் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.தற்போது கொரோனா பரவல்நிலைமை தீவிரமாக இருப்பதால், மக்கள் தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.எனினும், தற்போதைய வைரஸ் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பை தடுக்கமுடியும். இதேவேளை மினுவாங்கொட தொழிற்சாலை கொரோனா பரவலின் அனைத்து தொடர்புகளையும் கண்டறிய கணிசமான காலம் எடுக்கும்.இதற்கிடையில், மினுவாங்கொட பகுதியில் மட்டுமல்ல, பிற பகுதிகளிலும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தொழிற்சாலையின் பல பணியாளர்கள் யாழ்ப்பாணம், மாத்தளை, குருநாகல், மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.கண்காட்சிகள், பெரிய மாநாடுகள், கட்சிகள் போன்ற அனைத்து பொதுக் கூட்டங்களையும் நடத்தக்கூடாது என்று அரசாங்கம் தெரிவித்த போதிலும், திருமணங்கள் போன்ற முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை கண்டிப்பான அவதானிப்பு மற்றும் அந்தந்த பொதுச் சுகாதார ஆய்வாளர்களின் பரிந்துரைகளின் கீழ் நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக் கிடையே கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போதிய வைத்தியசாலைகள் இல்லாததால் சிரமமான நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த நோய்த்தொற்றுகளுடன் தொடர்புபட்ட ஏராளமான மக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த தொற்றாளர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.