இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதற்கமைய, மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இந்தப் பரீட்சைகள் இரண்டாயிரத்து 648 நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பரீட்சைகள் காலை 8.30 இற்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து பரீட்சார்த்திகளும் காலை 7.30 இற்கு பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, பரீட்சை அனுமதிப் பத்திரத்துடன் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ள வினாப்பத்திரங்களுக்கு, வினாக்களை வாசிப்பதற்கும், விடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் , 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பரீட்சார்த்திகளுக்கு வெளிநபர்களினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் எனில், அது தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிப்பதற்கு பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட குழுவொன்று தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.இதற்கமைய, பரீட்சைக் கண்காணிப்புக் குழுக்களை நாடு முழுவதும் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.