யாழில் எவரது உதவியும் இன்றி 350 மரக்கன்றுகளை சொந்தச் செலவில் நாட்டிப் பராமரிக்கும் உன்னத மனிதர்.!! யாழ். மண்ணில் இப்படியும் ஒருவரா.?

பலாலி வீதியில் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் இருந்து ஊரெழு அம்மன் கோவில் வரை சுமார் 350 நிழல் மரக்கன்றுகளை வீதியின் ஒரு பக்கத்தில் (மட்டும்), தனது சொந்தச் செலவில் நாட்டி – தண்ணீர் ஊற்றி வளர்த்த இராசையா குபேந்திரநாதன் பாராட்டுக்கு உரியவர். அவை இப்போது பெரிய மரங்களாக வளர்ந்து விட்டன. கோண்டாவிலைச் சேர்ந்த இராசையா குபேந்திரநாதன் மற்றோருக்கு இவ்விடயத்தில் முன்னோடியாக இருக்கிறார்.மரம் நடுவது என்றே எம்மிற் பலரும் சொல்வதுண்டு. அவ்வாறு சொல்லாமல் மரம் வளர்ப்பது என்றே கூறவேண்டும். மரம் நடுவது இலகுவானது. அதை வளர்த்தெடுப்பதே கடினமானதும், செய்யப்பட வேண்டியதும். அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் மரங்களை நடுவதுண்டு. அவற்றை வளர்ப்பதில்லை. மற்றவரின் உதவியின்றி இவ்வாறு ஒருவரால் 350 மரங்களை வளர்க்க முடியுமாயின், வேறு பலராலும் இது செய்ய முடிந்த ஒன்றுதான்.ஒவ்வொரு பிரதேசங்களிலும் பிரதேசசபை உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுமாறு மக்கள் கேட்கமுடியும். மக்களும் இணைந்து தாமாகச் செய்ய முடியும்.இனிவரும் வாரங்களில் இவ்வாறான முயற்சிகள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கவேண்டும். இவ்வருடம் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 300 மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்க்க ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். அது சாத்தியமே!அவ்வாறான ஒரு முயற்சியில் நான் ஈடுபட்டிருக்கிறேன். சரியான முறையில் அது வெற்றிபெறும்போது உங்களுடன் அதுபற்றி இங்கு பகிர்வேன்.மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். நம்பாதவர்கள் இராசையா குபேந்திரநாதனிடம் கேளுங்கள். அவரால் 350 மரங்களை வளர்க்க முடிந்தால், இதை வாசிக்கும் உங்களாலும் முடியும்!!

(தகவல், படங்கள்: பாக்கியநாதன் சசிகுமார்)

முகநூல் பதிவிலிருந்து- Thiagarajah Wijayendran