சமூகத்தில் மீண்டும் கொரோனா தொற்று..யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் கொரோனா தொற்றானது மீண்டும் சமுகமட்டத்தில் பரவும் ஏதுநிலை உருவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலத்தினை எடுத்துக்காட்டுகின்றது.அதாவது யாழ். மாவட்டத்தினை பொறுத்தவரை சமூக தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் முகக் கவசங்கள் அணிவது அவசியம். அடுத்ததாக சமூக இடைவெளி மிகவும் அவசியமாகும். இவை இரண்டையும் தவிர்த்து கட்டாயமாக கைகளை கழுவுதல் வேண்டும்.கண்ட இடங்களில் தொடுதல் கூடாது, பயணங்கள் செய்துவிட்டு வீடுகளுக்கு வரும் போது தமது கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.இத்தகைய காப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதன் மூலம் யாழ். மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படுவதனை கட்டுப்படுத்த முடியும். அடுத்ததாக அநாவசியமாக வீதிகளில் பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும்.மேலும், மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டும். கொரோனா தொற்று மீண்டும் ஏற்படுகின்றது என்ற அச்சத்தினால் மக்கள் எல்லோரும் பொது இடங்களில் ஒன்று கூடுகிறார்கள். அதாவது வியாபார நிலையங்களில் பொருட்களை வாங்குவதற்காக முண்டியடிக்கிறார்கள். இது மிகவும் தவறான விடயமாகும்.அடுத்ததாக இன்று ஏற்பட்டுள்ள கொரோனா சமூக தொற்று பலருக்கு பரவக் கூடாது. பரவுவதைத் தடுப்பதற்கு நாம் தேவையற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் அவசியமாகும்.

இது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலமே யாழ்ப்பாணத்தில் கொரோனா சமூக தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.