மினுவங்கொட முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 40ற்கும் மேற்ட்டவர்களுக்கு சுகயீனம்?

கம்பஹா – மினுவங்கொட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பெண் பணியாற்றிய முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இவர்களில் பலரும் அண்மையில் விடுமுறைகோரி விண்ணப்பித்திருந்ததாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 1500 பேர் இங்கு பணியாற்றுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், 40க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மினுவங்கொட – பாதுராகொட பகுதியில் இருந்து பயணிக்கும் வாகனத்தில் வேலைக்குச் செல்வதாகவும், அந்த வாகனத்தில் 35 பேர் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண், 20 பேரின் வேலைகளை மேற்பார்வை செய்யும் கடமையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.இந்த நிலையிலேயே, குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் போது பெண் உடல்நிலை சரியில்லாமல் 30ம் திகதி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.ஒக்டோபர் 1ம் திகதி, பி.சி.ஆர். பரிசோதிக்கப்பட்ட இரண்டாவது நாளில் அவர் வீடு திரும்பினார், எனினும் 3ம் திகதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில், குறித்த பெண் கொழும்பு ஐடிஎச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.