வெற்றிடமாக இருந்து வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு புதிதாக ஒருவர் தெரிவு !!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது.இந்நிலையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு துணைச்செயலாளராக செயற்பட்டு வந்த வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.இதன் பிரகாரம் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் துணைச் செயலாளராக செயற்பட்டு வந்த ப.சத்தியலிங்கம் தற்காலிக பொதுச்செயலாளராக செயற்படும் வகையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வைத்திய கலாநிதியுமான ப.சத்தியலிங்கத்திடம் கேட்டபோது அவரும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.