த.தே.ம முன்னணிக்குள் மாற்றத்தை ஏற்படுத்த விரைவில் பொதுச் சபையைக் கூட்டுவேன்..!! மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் நிலவும் சர்வாதிகார, ஜனநாயக விரோத, தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களினால் இனத்தின் நலனை பலி கொடுக்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த, கட்சியின் பொதுச்சபையை விரைவில் கூட்டவுள்ளேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து கஜேந்திரகுமார் அணயினால் அறிவிக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழ் தேசியவாதம் உயிரோடு இருக்க தொடர்ந்து செயற்படுவேன். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும், என்னை நீக்குவதாக அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.தன்னை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதாக முன்னர் கட்சியின் மத்தியகுழுவில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தபோதும், அந்த மத்தியகுழுவில் 5 மாவட்ட அமைப்பாளர்களும், பொருளாளரும் கலந்து கொள்ளவில்லையென்றும் தெரிவித்தார்.அதேவேளை,இறுதியாக கூடிய மத்தியகுழுவும், எற்கனவே கூடிய மத்தியகுழுவும் ஒன்றல்ல என்ற அதிர்ச்சி தகவலையும் அம்பலமாக்கினார். முன்னர் கலந்து கொண்ட ஆட்களை தவிர்த்து, தமக்கு ஆமாம் சாமி போடும் ஆட்களை மத்தியகுழு என்ற பெயரில் கஜேந்திரகுமார் தரப்பு அழைத்து வந்ததாகவும், கட்சியில் மத்தியகுழுவிற்கு திட்டவட்டமான வடிவமெதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என்றும் கூறினார்.நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக திசை திருப்ப முற்பட்டபோது அதனை கட்சிக்குள் இருந்து தான் கடுமையாக எதிர்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்த போதும், அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த தன்னை கடுமையாக எதிர்த்தார்கள் என்றும் கூறினார்.இன்று தன்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை என்றும், ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.தமிழ் தேசிய கட்சிகளின் உடைவுகள், சிங்கள தேசிய கட்சி வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்ற நிலையில், புதிய கட்சியோ, அமைப்போ உருவாக்குவது பெரிய விடயமே இல்லை என குறிப்பிட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன், தான் உருவாக்கிய கட்சி கண் முன்னால் அழிவடைந்து செல்வத பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை என்றும் கூறினார்.கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால், தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன் என்றும் எனவே, மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றும் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒரு சிலரது விருப்பு வெறுப்பிற்காக செயற்படும் குழுவாக அல்லாமல், மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக மாற்ற அழைப்பு விடுத்தார்.

அத்துடன், கட்சிக்குள் நடக்கும் பதவிப்போட்டிகள், தேர்தலில் எம்.பி பதவியை பெறுவதற்கு நடந்த தில்லுமுல்லுகளையும் அம்பலப்படுத்தினார்.இலட்சியத்திற்காக செயற்படுவதாக கூறிக்கொண்டு, பதவியை பெற சூழ்ச்சி செய்யும் அமைப்பாக தொடர்ந்து இருக்க முடியாது. கட்சிக்குள் நடக்கும் அநீதிகளை, சர்வாதிகார போக்கை கண்டும் காணாமலும் இருந்து கொண்டு, இனத்தில் விடுதலைக்காக செயற்படுவதாக கூறி ஊரை ஏமாற்ற வேண்டாம் என கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.