சூடுபிடிக்கும் ஐ.பி.எல்…பரபரப்பான சுப்பர் ஓவரில் பெங்களுரிடம் வீழ்ந்த நடப்புச் சம்பியன் மும்பை..!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியும், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, ஆரம்ப விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டது.இதில், அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ், 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய விராட் கோஹ்லி 3 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.இதன்பிறகு ஏ.பி. டிவில்லியர்ஸ் களமிறங்கிய அதிரடி காட்ட, மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த தேவ்தத் படிக்கல் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சிவம் டுபே 10 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும், டி வில்லியர்ஸ் 24 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற, பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனைத்தொடர்ந்து 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து நெருக்கடிக்குள்ளானது.
ஆனால், நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய இசான் கிசான் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார்.அதேபோல மறுமுனையில் ஆரம்பத்தில் நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கிரன் பொலார்ட் 16ஆவது ஓவருக்கு பிறகு அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தார். இதன்படி பொலார்ட் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மும்பை அணிக்கு வெற்றி கைவசம் இருக்க 19.5ஓவரின் போது இசான் கிசான் 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க போட்டியின் போக்கு மாறியது. இதுவே கிசானின் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.இசுரு உதான இறுதி ஓவரின் இறுதி பந்தை வீச 5 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. இதை எதிர்கொண்ட பொலார்ட் இதற்கு பவுண்ரி அடிக்க போட்டி சுப்பர் ஓவருக்கு இழுத்துச்செல்லப்பட்டது.
இதன்போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், ரோஹித் சர்மா 8 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் 14 ஓட்டங்களையும், சூர்ய குமார் யாதவ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பொலார்ட் 60 ஓட்டங்களுடனும், குர்ணல் பாண்ட்யா ஓட்டமெதுவும் பொறாத நிலையிலும் இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.பெங்களூர் அணியின் பந்துவீச்சில், இசுரு உதான 2 விக்கெட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுப்பர் ஓவர் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி, துடுப்பெடுத்தாட களமிறங்கியது.பெங்களூர் அணியின் நவ்தீப் சைனி மிக சிக்கனமாக பந்துவீசி, ஆறு பந்துகளுக்கு 7 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.இதனைத்தொடர்ந்து 8 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்களூர் அணி, இறுதி பந்துவரை பரபரப்புக்கு அழைத்துச் சென்று வெற்றியை ருசித்தது.
பெங்களூர் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டு வெற்றிகள், ஒரு தோல்வியை பதிவுசெய்துள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளை பதிவுசெய்துள்ளது.இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த டி வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.