பொதுமக்கள் போக்குவரத்தை மேலும் இலகுவாக்க குளிரூட்டப்பட்ட புத்தம் புதிய 100 பேரூந்துகள்..!!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்களின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக (Low Floor) தாழ்வான படிகளைக் கொண்ட 100 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.இந்தப் பேருந்துக்கள் கிடைத்ததும் அதில் 10 வீதமானவற்றை பேருந்து ஒழுங்கைகளில் சேவையில் ஈடுபடுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது பழைய பேருந்துகளை சேவையில் இருந்து அகற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சேவைகளில் இருந்து அகற்றாமல் அவர்கள் புதிய பேருந்துகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று கெமுனு தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் ஒப்புதல் மாத்திரமே தற்போது எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சீனாவின் குறித்த பேரூந்துகள் 80 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.சுமார் 12 முதல் 13 மில்லியன் ரூபா வரையான விலையில் அவற்றை கொள்வனவு செய்ய முடியும் என்று கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.புதிய பேருந்துகளை சேவைகளில் ஈடுபடுத்தியவுடன், பலரும் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பேருந்துகளை பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று கெமுனு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.காலையிலும்,மாலையிலும் அலுவலகப் பயணிகளை இலக்காகக் கொண்டு இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். இரவு 11.00 மணி வரை வேலை செய்பவர்களுக்கு வசதியாக அந்த பேருந்துகள் இரவில் கூட இயக்கப்படும்.
இந்த பேருந்துகளில் டிக்கெட்டுகளை வழங்குவதற்கு நடத்துனர்கள் இருக்க மாட்டார்கள். கணினி மின்னணு முறையிலேயே டிக்கட்டுக்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.