வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பூரண ஹர்த்தால் வெற்றி..!! மாவை சேனாதிராஜா அறிவிப்பு..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா. சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும், அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றபோதும் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வருவதாக குற்றம் சாட்டினார்.இதேவேளை 20ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றினால் நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டினார்.