13 ஆவது ஐ.பி.எல்…சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோல்வி.!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 44 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது போட்டி மஹேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்று துபாயில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை டெல்லிக்கு வழங்கினார்.அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.176 என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் முதல் 10 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது. அதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக கேதர் யாதவ் மற்றும் டூப்பிளஸ்ஸி ஜோடி சேர்ந்து சென்னை அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.இதனால், சென்னை அணி ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. எனினும் கேதர் யாதவ் 15.4 ஆவது ஓவரில் 26 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் (98-4).பின்னர் களமிறங்கிய தோனி டூப்பிளஸ்ஸுடன் கைகோர்த்து அதிரடி காட்ட சென்னைஅணிக்கு ஒரு கட்டத்தில் 18 பந்துகளுக்கு 65 ஓட்டம் என்ற இக்கட்டான நிலை வந்தது.இந்த இக் கட்டான தருணத்தில் டூப்பிளஸ்ஸி 35 பந்துகளில் 43 ஓட்டத்துடன் ரபடாவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 44 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. ஆடுகளத்தில் சாம் கரன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.பந்து வீச்சில் ரபாடா 3 விக்கெட்டுக்களையும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டினையும், அன்ரிச் நார்ட்ஜே இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.