ஐ.பி.எல்..2020: பலம்வாய்ந்த கொல்கத்தாவை ரோஹித் அதிரடியால் வீழ்த்தியது மும்பாய் இந்தியன்ஸ்..!!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது.அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயிண்டன் டி கொக் 1 ஓட்டத்துடன் ஏமாற்றினார்.தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மாவுடன் இணைந்து அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.இருவரும் இணைந்து 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, சூர்யகுமார் யாதவ், துரதிஷ்டவசமாக 47 ஓட்டங்களுடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.இதன்பிறகு களமிறங்கிய சவுரப் திவாரி 21 ஓட்டங்களுடனு; ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ரோஹித் சர்மாவும் 80 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.கிரன் பொலார்ட் 13 ஓட்டங்களுடனும் குர்ணல் பாண்ட்யா 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், சிவம் டுபே 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஆரம்பமே தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆரம்ப விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்களுக்கு இழந்தது.அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுப்மான கில் 7 ஓட்டங்களுடனும், சுனில் நரைன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.இதன்பிறகு களமிறங்கிய வீரர்கள், களத்தில் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 49 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அணித்தலைவர் தினேஷ் கார்திக் 30 ஓட்டங்களையும், நிதிஷ் ரனா 24 ஓட்டங்களையும், பெட் கம்மின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.குறிப்பாக உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பெட் கம்மின்ஸ் 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்ரி அடங்களாக 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை இப்போட்டியில் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.பும்ரா வீசிய 18ஆவது ஓவரில் அனைவரும் வியக்கும் வகையில் பெட் கம்மின்ஸ் நான்கு சிக்ஸர்களை விளாசினார்.மேலும், ஓய்ன் மோர்கன் 16 ஓட்டங்களும், ஆந்ரே ரஸ்ஸல் 11 ஓட்டங்களும், நிகில் நைக் 1 ஓட்டத்துடனும், சிவம் டுபே 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். குல்தீப் யாதவ் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.இதன்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ட்ரென்ட் போல்ட், ஜேம்ஸ் பெட்டின்சன், ராகுல் சாஹர் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிரன் பொலார்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக 54 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட்டார்.மும்பை இந்தியன்ஸ் அணியின் இது முதல் வெற்றியாகும். முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியடைந்திருந்தது. கொல்கத்தா அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியுள்ளது.