தீலிபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றில் 24ஆம் திகதி இறுதித் தீர்ப்பு!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தடையை நீடிப்பதா அல்லது நடத்த அனுமதிப்பதா என்பதை வியாழன்று அறிவிப்பதாக யாழ் நீதிவான் அறிவித்துள்ளார். திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ் நீதிமன்றத்தில் பொலிசார் தொடர்ந்த வழக்கு, இன்று காலை மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது, யாழ் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாக பொலிசார் அவகாசம் கோரினர்.இதன்படி, மதியம் 1.30 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, 160வது பிரிவின் கீழ் பொலிசார் வழக்கு தாக்கல் செய்தது தவறு என தெரிவித்தார்.என்.சிறிகாந்தா, கணாதீபன், வி.திருக்குமரன், க.சுகாஷ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.பொலிசார் தரப்பில் நினைவேந்தலை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திலீபன் பிறந்ததில் இருந்து உயிரிழந்தது வரை அவரது வரலாற்றை பொலிசார் மன்றில் தெரிவித்தனர். அத்துடன், திலீபனின் ஐந்து அம்ச கோரிக்கையையும் மன்றில் தெரிவித்து, அவர் விடுதலைப் புலி உறுப்பினர்தான் என வாதிட்டனர்.

விடுதலைப் புலிகள் மாணவர் பேரவையை அவர்தான் உருவாக்கியதாகவும், திலீபனின் உடல் யாழ் பல்கலைகழக மருத்துவபீடத்தில் ஒப்படைத்தது என கூறியதுடன், திலீபன் விடுதலைப் புலி உறுப்பினர் என்பதால் அஞ்சலியை தடை செய்ய வேண்டுமென கோரினர்.திலீபன் நினைவேந்தலிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் ஆட்களை ஏற்றி வரப் போகிறார்கள், அந்த மக்கள் விருப்பமில்லாத போதும், வலுகட்டாயமாக ஏற்றி வரப் போகிறார்கள் என தெரிவித்தனர்.இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த மன்று, வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது. அன்று தீர்ப்பு வழங்கப்படும்.