உச்சத்தை தொட்ட தேங்காய் விலை.! தென்னை மரத்தில் ஏறியபடி தேங்காய் விலை உயர்வு குறித்து பேசிய இலங்கை அமைச்சர்.!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று தென்னை மரத்தில் ஏறி இருந்தபடி உள்ளூர் சந்தையில் தேங்காய்களின் விலை உயர்ந்து வருவதைப் பற்றி பேசினார். உலக சந்தையில் தேங்காய் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இலங்கையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.வரக்காப்பொல ஒருவர் தயாரித்த தென்னையில் ஏறும் இயந்திரத்தின் உதவியுடன் அமைச்சர் தங்கொட்டுவ பகுதியில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறினார்.

இயந்திரத்தை தனிப்பட்ட முறையில் பரிசோதித்த அமைச்சர், இது அடுத்த சில மாதங்களில் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். மரத்திலிருந்து ஒரு சில தேங்காய்களைப் பறித்த அமைச்சர், இன்று ஒரு தேங்காயின் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்றும், ஒரு தென்னை மரத்தில் ஏறும் தொழிலாளிக்கு ரூ. 100. வரையே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.தேங்காய் பறிப்பதற்காக தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.தேங்காயின் விலை எவ்வளவு உயர்ந்திருந்தாலும், தேங்காயை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.