மனநோயாளியான யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை..!!

மனநோயாளியான யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சப்புவந்த, 54 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.கண்டி, உடுத்தும்பர பிரதேசத்தை சேர்ந்த என்.ஜீ. ஜயசேன என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி முதல் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி வரையான காலத்தில் குற்றவாளி கண்டி மெதகெதர பிரதேசத்தில் குறித்த யுவதியை மூன்று சந்தர்ப்பங்களில் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்தை குற்றவாளி ஒப்புக்கொண்ட பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி யுவதி ஒரு முறை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றத்திற்கு 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.யுவதியை மூன்று முறை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளதால், தலா 18 ஆண்டுகள் என 54 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யுவதியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 75 ஆயிரம் அபராதம் விதித்துள்ள நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இதனைத் தவிர பாதிக்கப்பட்ட யுவதிக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி, அதனை செலுத்த தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் நிதியத்தில் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வைப்புச் செய்யவில்லை என்றால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.கடந்த 11 ஆம் திகதி நடந்த இந்த வழக்கு விசாரணையில் முறைப்பாட்டாளர் சார்பில் அரச சட்டத்தரணி தனுஷ்க ராகுபத்த ஆஜராகியிருந்தார்.