23 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி அதிரடியாகக் கைது.!!

மீகஹாவத்த – சப்புகஸ்கந்த பகுதியில் 23 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி இந்தியா – தனுஸ்கோடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது தொடர்பில் இந்திய தரப்பிடம் விபரங்களை கோரியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.மீகஹாவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சப்புகஸ்கந்த பகுதியில் கடந்த புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 23 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.சந்தேக நபரினால் நடத்தப்பட்டு வந்த தச்சு நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட ஒலி பெருக்கிகள் இரண்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே, இந்த ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.இதன்போது சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் , அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த ஹெரோயின் போதைப் பொருள் கொழும்பு குற்றப் பிரிவில் பணியாற்றி வந்த அவருடைய சகோதரருடையது என்று அவர் கூறியதாக தெரிவித்திருந்தனர்.கொழும்பு குற்றப் பிரிவில் பணியாற்றியதாக கூறப்படும் சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அவரை கைது செய்வதற்கு எதிர்பார்த்திருந்த போதும், அவரை இதுவரையில் கைது செய்யவில்லை.இந்நிலையில் இந்தியாவின் – தனுஷ்கோடி பகுதியில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர் பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ளவராகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.அவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி என்று தெரியவந்துள்ளன.இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்னவை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது அவர் கூறியதாவது,இந்நாட்டைச் சேர்ந்த நபரொருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அது தொடர்பில் இந்தியாவிலிருந்து உத்தியோப்பூர்வமாக எமக்கு எந்த அறிவிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. இதனை உறுதிப்படுத்திக் கொண்வதற்காக இராஜதந்திர முறையில் இந்தியாவிற்கு அறிவித்துள்ளோம். தகவல்கள் கிடைக்கப் பெற்றதும், அதனை நாட்டுக்கு தெரியப்படுத்துவோம் என்றார்.