கொரோனா மயக்க நிலையிலிருந்து மீண்டெழுந்து தமது திருமண நாளை ஐ.சி.யுவில் மனைவியுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய எஸ்.பி.பாலா.!!

இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வு வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு இன்று திருமண நாளாகும். இதனை முன்னிட்டு ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக பிரத்யேகமாக கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டது. பின்னர் வைத்தியர்களின் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரி ஆகிய இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 5ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்த மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. ‘2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்’ என்று கூறி அவர் ஒரு காணொலியையும் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன் எம்.ஜி.எம்.மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டுவரும் நிலையில், நுரையீரல் செயல்பாடு இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான சிகிக்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.மகன் சரண் வெளியிட்ட காணொளியில், அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.இந்நிலையிலேயே எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.