சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அபாய எச்சரிக்கை..!!

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் வெளியிட்டு நிதி மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.கிடைத்துள்ள முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு முறை ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இந்த நிதி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவிடம் தகவல் கிடைத்துள்ளது.தாய்லாந்தில் தொழில் வாய்ப்புகள் உள்ளதாக விளம்பரம் பதிவிட்டு நிதி மோசடி மேற்கொள்ளும் குழு தொடர்பில் பாங்ஹொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக மோட்டார் வாகன சீட்டிழுப்பில் மோட்டார் வாகனம் ஒன்று கிடைத்துள்ளதாக பணம் மோசடி செய்யப்படுவதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பேஸ்புக் ஊடாக அடையாளம் காணப்படும் நபர்களினால் அவ்வாறான பரிசுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை சுங்க பிரிவில் விடுவிப்பதற்கு பணம் வைப்பிடுமாறும், திருமண யோசனைகள் முன் வைத்து நிதி மோசடிகள் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு குழுவினர் இணைந்து மேற்கொள்ளும் மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.