போதைப் பொருள் விற்பனைப் பணத்தில் 4,000 மில்லியன் பெறுமதியில் காணி!! பொலிஸார் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!

மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பதில் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, கடத்தல் காரர்களின் 102 வங்கி கணக்குகள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது;

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிப்பதற்காக நாடுபூராகவும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து தகவலை அறிந்து கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் இரு தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அழைப்புக்கு இதுவரையிலும் பெருந்தொகையான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்நிலையில் 1917 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு போதைப் பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகளின் ஊடாக யாராவது ஒருவர் சொத்துகளை சேகரித்து வைத்திருந்தால், அது தொடர்பில் தகவலை பெற்றுக் கொடுக்க முடியும்.அதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மாத்திரம் 671 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவற்றுள் கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் 110 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் உரிய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேல்மாகாணத்தில் மாத்திரம் போதைப் பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயற்பாடுகளின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ள 12 காணிகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.இதன்போது 4000 மில்லியன் ரூபாய் பெறுமதியான 900 பேர்ச்சஸ் காணிகள் தொடர்பில் கறுப்புப்பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை 12 சொகுசு கார்களும், 7 முச்சக்கர வண்டிகளும், 7 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு சொந்தமான 102 வங்கி கணக்குகள் மேல் மாகாணத்தில் மாத்திரம் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதனுடாக 2600 மில்லியன் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 96 மில்லியன் ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
இதேவேளை 1997 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு போதைப் பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தகவல்களை பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கமைய, இதுவரையில் 3800 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும், பதில் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர,தெரிவித்துள்ளார்.