வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாவை சுருட்டிய தம்பதி பொலிஸாரால் அதிரடியாகக் கைது..!!

ஐரோப்பிய நாடுகளிலும் கொரியாவிலும் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு பண மோசடியில் ஈடுபடும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலிடம் ஏமாற வேண்டாம் என பொலிஸ் அதிகாரி லால் செனவிரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் 25 பேர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் சி ஐ டி யால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தம்பதியர் இருவரும் உயர் கல்வி கற்றவர்கள் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவர்கள் என்றார்.வேலைவாய்ப்பு தொடர்பான தனிப்பட்ட தகவல்களைப் பெறும் இவர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்போரிடம் முதலில் ரூ 200000 பணத்தை தமது தனிப்பட்ட கணக்குகளில் வைப்பு செய்யுமாறு தெரிவிப்பதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.இவர்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பின் சிம், வங்கி விபரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து குடும்ப விபரங்களையும் பெற்றுக்கொள்வர். பின்னர் அவர்கள் குறித்த நபரின் தேசிய அடையாள அட்டைஇலக்கத்தை பயன்படுத்தி அவர் பெயரில் சிம் ஒன்றை இரகசியமாக வாங்குகின்றனர்.
பின்னர் அவர்கள் தமது இரகசிய இலக்கத்தை தொலைத்து விட்டதாகத் தெரிவித்து வங்கியில் புதிய இரகசிய இலக்கத்தை வாங்குகின்றனர்.இந்த நோக்கத்திற்காக, அவர்கள் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களை மனப்பாடம் செய்து வங்கி அதிகாரிகளுக்கு அளிக்கின்றனர்.அந்த இரகசிய இலக்கத்தின் மூலம் குறித்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் திரும்பப் பெறப்படும் என்று பொலிசார் கூறுகிறார்கள். இந்த மோசடி குறித்து வங்கிகள் மற்றும் தொலைபேசி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.