கொரோனாவினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி..!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவமனை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்றுமுதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில், இருந்து அவர் மீண்டு வருவதற்காக மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆழ்ந்த கோமாவில் உள்ள அவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை விரைவாக செயலிழக்கச் செய்வதுடன், பிற நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மூளையில் கட்டியை அகற்றுவதற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் கோமா நிலையை அடைந்தார். அத்துடன், அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.