வீட்டை விட்டே வெளியே வராமல் இருந்த பெண்ணுக்கு கொரோனா..!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!

அமெரிக்காவில் மூன்று வாரங்களாகத் வீட்டை விட்டு வெளியே வராத பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சார்லொட்டே நகரைச் சேர்ந்தவர் ரேச்சர் ப்ரமெர்ட்.ஏற்கெனவே நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்னையால் தவித்து வரும் அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி 3 வாரங்களாக வீட்டைவிட்டே வெளியேறவில்லை.மூன்று வாரங்களுக்கு முன் மருந்தகம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வந்ததே அவர் கடைசியாக வெளியில் சென்று விட்ட வந்த இடம் என தெரிகிறது.வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவரும் அவரது கணவரும் தற்போது தனியாக மற்றொரு அறையில் வசித்து வருகிறாராம். அவரது கணவர், மருந்தகத்தில் இருந்த பார்மசிஸ்ட் தவிர அவரது வீட்டுக்கு மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் பெண் ஒருவர் என 3 பேரை மட்டுமே இந்த 3 வாரங்களில் சந்தித்ததாகச் சொல்கிறார் அந்தப் பெண்.

அதேநேரம், டோர் டெலிவரி செய்த அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணை ஒருமுறை கூடத் தொட்டதே இல்லை என்று சொல்லும் ரேச்சல், ஆனால் அவர் கொண்டுவரும் பொருட்களை கையில் கிளவுஸ் எதுவும் அணியாமல் வீட்டுக்குள் எடுத்து வைத்ததாகவும் சொல்கிறார்.இந்த சூழலில் தான் திடீரென அவருக்குக் காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து கொரோனாவுக்கான பரிசோதனையை செய்தபோது, தொற்று உறுதி என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் அறிவுரைப்படி நாம் சரியான விடயத்தைத் தான் செய்கிறோம் என்று இந்த 3 வாரங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அதிர்ந்துபோய் விட்டேன் என கூறினார்.இதனிடையில் அவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் விசாரணையில் அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.