பேரனின் திருமணத்திற்கு ஹெலிஹொப்டரில் வந்து அசத்திய வயோதிபத் தம்பதிகள்..!!

பேரன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தாத்தா-பாட்டி வாடகை ஹெலிகாப்டரில் வந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே மிக அவசியமான பயணங்களை மேற்கொள்வதில் கூட பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த தினத்தில் இருந்து ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களின் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.இந்த எச்சரிக்கைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக பொது போக்குவரத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. எனினும் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் பேருந்துகள் ஓடுகின்றன. எனவே, பொது போக்குவரத்து இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.மேலும் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் உள்ளன. எனவே சொந்த கார்களில் தொலை தூர பயணங்களை மேற்கொள்வதும் எளிதில் சாத்தியமாகாத விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், பேரனின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு வயதான தம்பதியினர் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ள நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹெலிகாப்டருக்கு வழங்கப்பட்ட வாடகையும் பிரம்மிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கல்பதி என்னும் பகுதியை சேர்ந்தவர் கே.என்.லட்சுமி நாராயணன். தற்போது 90 வயதாகும் கே.என்.லட்சுமி நாராயணன், எழுத்தாளராக உள்ளார். இவரது மனைவியின் பெயர் சரஸ்வதி. இவருக்கு 85 வயதாகிறது. இவர்களது பேரன் டாக்டர் சந்தோஷ். இவரது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் சென்றாக வேண்டிய சூழல் லட்சுமி நாராயணன்-சரஸ்வதிக்கு உருவானது. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில், சாலை மார்க்கமாக காரில் பயணம் செய்வது மிகவும் சவாலான ஒரு விஷயம். இதனால் லட்சுமி நாராயணன்-சரஸ்வதி தம்பதியினரின் மகன் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தார்.அவர்கள் பயணம் செய்வதற்காக, பெங்களூர் நகரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மா-அப்பாவின் பயணம் சிரமங்கள் இல்லாமல் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் மகன் இந்த பிரம்மாண்டமான ஏற்பாட்டை செய்துள்ளார்.பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் பெங்களூர் வந்து சேர சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகியுள்ளது. இந்த வயதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறோம் என லட்சுமி நாராயணன் கூறியுள்ளார். ஆகாய மார்க்கமாக அவர்கள் மேற்கொண்ட முதல் பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வயதான தம்பதியினரின் ஹெலிகாப்டர் பயணம் குறித்த செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது.