நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்..!! கருஜெயசூரிய அதிரடி அறிவிப்பு!

கட்சி மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கும் சவாலை ஏற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும்,டி.எஸ். சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியே எமது தாய் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும் முதன்மையான பங்களிப்பை வழங்கிய கௌரவமான தேசப்பற்று மற்றும் தேசியவாத அரசியல் சக்தியாகும்.அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியே இலங்கையின் உண்மையான தேசப்பற்றுடன் 21ஆம் நூற்றாண்டின் சவாலை எதிர்கொள்ள தேவையான அனுபவம், நிபுணத்துவம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட அரசியல் கட்சி.

எனினும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது கட்சியினர், நாட்டில் வாழும் முற்போக்கு மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் பிரஜைகளின் வருதத்திற்கு காரணமாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி என்ற இந்த அபிமானம் மிக்க அரசியல் சக்திக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான நிலைமையில் இருந்து கட்சியை மீட்டு கட்சிக்குரிய அபிமானத்தை மீண்டும் நிலை நிறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியால் இலங்கைக்கு எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையை செய்ய முன்வருமாறு கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் பல தேசப்பற்றுள்ள தரப்பினர் எனக்கு அழைப்பு விடுத்தனர்.தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமையை கவனத்தில் கொண்டும் பல தரப்பினர் என்னிடம் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்துள்ளேன்.ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கும் சவாலை ஏற்றுக்கொள்ள முடியும் என கட்சியின் தற்போதைய தலைவர் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளேன்.இந்த தீர்மானமானது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கையின் எதிர்காலம், நியாயத்தை மதிக்கும் தேசப்பற்றுள்ள மக்களுக்காக நான் எடுத்துள்ள தீர்மானம் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.