கொரோனாவினால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 376 இலங்கையர்கள் இன்று கொழும்பிற்கு..!!

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 376 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.அதற்கமைய அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.அதன்படி, அவுஸ்ரேலியாவிலிருந்து 239 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அதிகாலை 3.38 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.பயணிகளில் பெரும்பாலோர் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 35 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை 1.26 மணிக்கு டுபாயிலிருந்து கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.இதேநேரம், கென்யாவின் நைரோபியில் இருந்து 83 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை 1.18 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.அதேபோன்று, கட்டாரில் இருந்து 19 இலங்கையர்கள் கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அதிகாலை 1.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.அதனையடுத்து, அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.