இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…கொரோனாவிற்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி விரைவில் இலங்கையிலும்.!!

கொவிட்-19 சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்தலுக்காக ரஷ்யா கண்டு பிடித்துள்ள தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் உரிய பரிந்துரைகளையும் அனுமதியையும் வழங்கிய பின்னர் அதனை இலங்கையிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி பி.மதேரி மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.சந்திப்பின் போது, கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த வழிமுறைகளால் வெற்றிகரமாக அதனை எதிர்கொள்ளமுடிந்தது என்று தெரிவித்த ரஷ்ய தூதுவர், இதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார்.கொவிட்-19 க்கான சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்தலுக்காக ரஷ்யா கண்டு பிடித்துள்ள தடுப்பூசி குறித்து இதன் போது தூதுவர் அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார். இந்த தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரை மற்றும் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் இலங்கையில் கொவிட்-19 கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக இதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.மேலும், இலங்கையில் மருத்துவர்களை உருவாக்குவதற்கு ரஷ்யா வழங்கியுள்ள உதவிகளுக்கு அமைச்சர் இதன் போது தூதுவரிடம் நன்றி தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்ய தூதுவர் , இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்கின்ற நட்புறவின் பிரதிபலனாக இலங்கையின் வைத்தியர்கள் மற்றும் ஏனைய துறை நிபுணர்களின் கல்விக்காக ரஷ்யாவின் உதவித்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.