வடக்கில் 12 மாணவர்களிற்கு ஒரு ஆசிரியர் இருந்தும் கல்வியில் கடைநிலையில் வடக்கு.!!

தேசியரீதியில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருக்கும் போது வடமாகாணத்தில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று ஆசிரியர்களின் வளப்பகிர்வு இருக்கின்றது. இருந்தபோதும் மாணவர்களின் பெறுபேறுகளில் காணப்படும் பின்னடைவு தேசியரீதியில் கடைசி தரத்தில் இருக்கின்றது என வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட நான்கு பாடசாலைகளில் அமைக்கப்பெற்ற கட்டடங்களை இன்று திறந்து வைத்துள்ளார்.இன்று காலை 9.30 மணிக்கு முள்ளியளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட கலைக்கூட கட்டட தொகுதியை திறந்து வைத்த ஆளுநர் அங்கு உரை நிகழ்த்தினார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,கல்வி சம்மந்தமான பாரிய சவால்களுக்கு வடமாகாணம் முகம் கொடுத்து வருகின்றது. கல்வி சார்ந்த சமூகத்துடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.ஒப்பீட்டளவில் இலங்கையில் எந்த மாகாணத்தினை பார்த்தாலும், வடமாகாணத்தில் இருக்கின்ற பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விட குறைந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன்தான் ஏனைய பாடசாலைகள் இருக்கின்றன.தேசியரீதியில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருக்கும் போது வடமாகாணத்தில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று ஆசிரியர்களின் வளப்பகிர்வு இருக்கின்றது. மாணவர்களின் பெறுபேறுகளில் காணப்படும் பின்னடைவு தேசியரீதியில் கடைசி தரத்தில் இருக்கின்றது. இந்த விடயம் எங்களை உளரீதியாக பாதிக்கின்ற விடையமாக காணப்படுகின்றது.இதனை வடமாகாணத்தில் வாழ்கின்ற அனைவரும் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். பல்வேறு தேவையற்ற கருத்துக்களையும் சிந்தனைகளையும் வளர்த்து வருகின்ற சமூக சிந்தனையாளர்கள் கல்வியில் ஏற்படுகின்ற தேக்க நிலை சம்மந்தமான கருத்தியல்களை சமூகத்தில் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.இப்போது நாடு ரீதியாக எங்கள் ஜனாதிபதி அவர்கள் போதைவஸ்து சம்மந்தமாக எடுத்துவரும் நடவடிக்கையினால் யாரும் நினைத்து பார்க்க முடியாத இடங்களில் நினைத்த பார்க்க முடியாத மனிதர்கள் எத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது வெளிப்படுவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது.இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி அவர்கள் அக்கறையாக இருக்கின்றார்கள். இதுவிடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அவசரமான கடிதத்தினை நான் எழுதியுள்ளேன்.

வடமாகாணத்தில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்கள் சுதந்திரமாக தங்கள் கல்வியினை பெற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் எனக்கு பதிலளித்துள்ளார். இதற்கு அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான சகல முயற்சிகளும் தற்போது ஆரம்பித்து விட்டதாகவும் நடவடிக்கைகளை மாகாணத்தில் நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று.இதனை செய்பவர்கள் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சமூகவிரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியவர்களாக இந்த சமூகத்தில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.பேச வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றதை விட்டு தேவைவயற்ற விடயங்களைத்தான் பேசிக்கொண்டிருக்கின்றோம். வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றது. போதைவஸ்து கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மாணவர் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. குடும்பம் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கான வாழ்வாதாரம் இல்லை. இந்த நிலையில் இவற்றை விட்டுவிட்டு சம்மந்தம் இல்லாத விடயங்கள்தான் இந்த மாகாணத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த சமூகத்தினை தூக்கி நிலைநிறுத்த வேண்டிய ஆக்கபூர்வமான விடயங்களை சமூக சிந்தனையாளர்கள் கருத்தியலாளர்கள் ஈடுபட வேண்டும். தவறாக வழிநடத்தவென்று ஒரு குழுவினர் இருந்து கொண்டிருப்பார்கள். ஒரு கருத்தியலை சமூகத்தில் பரப்புவதன் ஊடாக தவறான பாதையில் இட்டுசெல்ல வேண்டும் என்பது ஒரு குழுவினரின் செயற்பாடு. அவர்களின் முயற்சிகளை அண்மையில் நடத்த தேர்தல் முடிவுகளில் மக்கள் தோற்கடித்துள்ளார்கள். தேவையற்ற பொய்யான பிரச்சாரங்களை வீணான கதைகள் பொய் வதந்திகளுக்கு எல்லாம் மக்களால் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் ஜனாதிபதியின் செயற்பாட்டினையும் அவரின் நேர்மையான திறமையான முடிவுகளையும் மக்கள் தற்போது ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

இதனை பொறுக்க முடியாதவர்கள் தொடர்ந்தும் பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே மக்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும். உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று உலகத்தில் ஒப்பீட்டளவில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் எல்லாம் கொரோனா வைரசில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தடுமாறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் இலங்கை மட்டும்தான் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்ற நாடாக இருக்கின்றது.இதுவரை சமூகரீதியாக கொரோனா தொற்று ஏற்படாத நாடாக இருக்கின்றது இதனுடன் நாங்கள் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நாடாக இருக்கின்றோம். எங்கள் நாட்டவர்கள் வெளிநாடுகளில் தவித்து நிக்கின்ற வேளையில் அவர்களை கொண்டுவந்து அவர்களை மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நாடாக இருக்கின்றோம்.வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்கள் விடுமுறைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்கள். வேலையற்று தவித்த இளைஞர்கள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இப்படியான செயல் வீரம்மிக்க ஒரு தலைமைத்துவத்தினை எங்கள் ஜனாதிபதி நாட்டிற்கு வழங்கி இருக்கின்றார்.உண்மைகளை ஏற்றுக்கொள்கின்ற உண்மைகள் கசக்கின்ற போதென்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்கின்ற மனம் உடையவர்களாக வடக்கின் மக்களும் கிழக்கின் மக்களும் மாறிக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாதவர்கள் மேலும் மேலும் கதைகளை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை விடுத்து உண்மைகளை தரிசிக்க முயலுங்கள். உண்மைகளின் ஊடாக இந்த மாகாணத்தின் அபிவிருத்தியினை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.