உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய வழங்கும் மிகப் பெரிய பரிசுப் பொதி..!!

உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், திறந்த பல்கலைக்கழக முறைமையை முன்னேற்றுவதற்கும் தொலைக்கல்வியை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முழுமையான கொள்கைப் பிரகடன உரை இதோ,

ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். ஸ்திரமான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக 2/3 அதிகாரத்தை பெற்றுத் தருமாறு நாம் மக்களிடம் கேட்டிருந்தோம்.வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2/3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதன் நட்பு அணிகளுக்கும் பெற்றுத் தந்த நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நான் முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.சர்வஜன வாக்குப் பலம் நாம் அனைவரும் மதித்துப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக உரிமையாகும். எனவே இந்த தேர்தலில் தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்திய அனைத்து இலங்கை வாக்காளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகப்பெரும் மக்கள் ஆணையை வழங்கியது என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவாகும். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நான் வழங்கிய உறுதிமொழியை இதுவரையிலான எனது செயற்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.

ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம் பொறுப்பேற்றோம். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் நாம் சிறுபான்மையான ஒரு அரசாங்கத்துடனேயே செயற்பட வேண்டியிருந்தது. இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று.கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் உலகின் முக்கிய நாடுகள் கூட முடங்கியிருந்த நிலையில் அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு எமக்கு இயலுமானது. நோய்த் தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது.இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணிக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது. அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு மக்கள் மதிப்பளித்து வருகின்றனர்.மக்கள் பிரதிநிதிகளாக பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்கிறோம். மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கு அப்போதுதான் முடியுமாக இருக்கும்.எமது நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் எனது பதவிக்காலப் பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளப்படுத்துவதாகவும் நான் உறுதியளித்திருக்கின்றேன். அதற்கு ஏற்ப அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் முன்னணி பௌத்த பிக்குகளைக்கொண்ட ஆலோசனை சபை ஒன்றை அமைத்துள்ளேன். அதேபோன்று தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளேன்.பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம், இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுவும் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது. எமது பாரம்பரிய மரபுரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கும் கிராமிய கலைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது மக்கள் மத்தியில் நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தது. எமது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை நாட்டின் பாதுகாப்பாகும் என்பதை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையை மறுசீரமைத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்தவொரு பிரஜைக்கும் தனதும் தனது குடும்பத்தினதும் பாதுகாப்புப் பற்றி எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை நாம் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறோம்.