கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறும் கதையாக கூட்டமைப்பு…நாடாளுமன்றில் தனித்து இயங்க ரெலோ மற்றும் புளொட் தீர்மானம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தான்தோன்றித்தனமாக இலங்கை தமிழ் அரசு கட்சி செயற்படுவதன் எதிரொலியாக முதல் பிளவு தோன்றியுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை பங்காளிகளிடம் வழங்காமல் விட்டால், ரெலோ மற்றும் புளொட் என்பன நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க தீர்மானித்துள்ளன.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் முடிவில், இது பற்றிய இறுதியாக முடிவு தெரியவரும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டுக்குள் பல கட்சிகள் இருந்தாலும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெயரில் சம்பந்தன்- சுமந்திரன் கூட்டு எடுத்து வரும் தான்தோன்றித்தனமான முடிவுகளிலேயே கூட்டு இயங்கியது. இதனாலேயே கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டு கஜேந்திரகுமார் தரப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்புக்கள் வெளியேறினர். கழுதை தேய்ந்த கட்டெறும்பான கதையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளது.

கூட்டமைப்பின் முடிவுகளிற்காக கிடைத்த வரப்பிரசாதங்களையும் முடிவுகள் எடுத்த தரப்புக்களே பகிர்ந்து கொண்டதாக கூட்டமைப்பிற்குள் முணுமுணுப்பு உண்டு. நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிந்த கதையாக மாவை சேனாதிராசாவும் கிடைத்த வரையில் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார்.இந்த நிலையில், தமிழ் அரசுக்கட்சிக்குள் சுமந்திரன் அணியென்ற பெயரில் ஒரு குறூப் தீவிரமாக இயங்க தொடங்கியதையடுத்து, மாவை கடிவாளத்தை கையிலெடுக்க, இரகசிய சதியின் மூலம் அவரும் தேசியப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது தலைமையையும் குறிவைத்து, சர்ச்சையானதையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசியப்பட்டியலை திருட்டுத்தனமாக வழங்கியதில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மூன்றும் அதிருப்தியுடன் உள்ளனர். இதுவரை தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக நடந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையான அர்த்தத்தில் அந்த பெயரில் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனே அவ்விதம் செயற்பட்டனர்.

இப்பொழுது, இருவரின் தன்னிச்சையான போக்கிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட் மூன்றும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், இந்த போக்கை நிறுத்தி ஆரோக்கியமான நிலைமையொன்றை உருவாக்க முனைகின்றன.இந்த நிலையில் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை பங்காளிக்கட்சிகள் கோரியுள்ளன. அது கிடைக்காத பட்சத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்க முடிவெடுத்துள்ளன. இன்றைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் முடிவில், இன்றே சபாநாயகரை சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்டாலும், கடந்த நாடாளுமன்றத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து செயற்பட்டதை போல, இரண்டு கட்சிகளும் தனித்து செயற்படவுள்ளன. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் உரையாற்ற கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.