வீட்டிலிருக்கும் காலம்…பொழுதை பிரயோசனமாக மாற்ற வீட்டுத் தோட்டம் அமைப்போம்…

காய்கறிகள் நம் அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவின் சுவையை கூட்டுகிறது. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி ஒரு வயதுவந்த நபர் சீரான திட்ட உணவிற்கு ஒருநாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ணவேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும்பொழுது ஒரு நபர் ஒரு நாளைக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது. மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான வீட்டுக் காய்கறி தோட்டத்தில் நம்மிடமுள்ள சுத்தமான தண்ணீர், சமையலறை அல்லது குளியலறை கழிவுநீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், அதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும் சுற்றுசூழல் மாசுபாட்டையும் தடுக்கலாம். இதனால் பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ள முடிகிறது.மிக குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால் மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு ரசாயனங்கள் படிவத்தை தவிர்க்க முடிகிறது.

குளியலறை கழிவுநீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை மற்றும் சேப்பங்கிழங்கு செடிகளை வைத்தால் சோப்பு தண்ணீரை இந்த செடிகள் சுத்தமாகிவிடும் இவ்வாறு கழிவு நீர்களை நாம் இயற்கை முறையில் மறுசுழற்சி செய்வதினால் கழிவுநீர் என்பதே தேங்காது, இதனால் கொசுக்கள் உற்பத்தி குறையும் மற்றும் வீட்டில் எப்பொழுதும் குளிர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.இதனால், கிராமங்களில் இருப்பவர்கள் வீட்டுத்தோட்டங்களையும் நகரங்களில் வாழ்பவர்கள் மாடித்தோட்டங்களில் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்.வீட்டுதோட்டம் அமைக்கும் முறை:வீட்டில் இருக்கும் இடவசதிக்கு ஏற்றவாறு நாம் காய்கறிகளை பயிரிடலாம். இடத்தை மண்வெட்டியினால் நன்கு உழுது சமன்படுத்தி பாத்திகளை ஏற்படுத்த வேண்டும். மாட்டு சாணம் அல்லது ஆட்டு சாணத்தை தொழுவுரமாக பயன்படுத்தும்பொழுது நமக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும்.வீட்டு தோட்டத்தில் குறைவான இடத்தில் தக்காளி , கத்தரிக்காய், மிளகாய் செடிகளை வளர்க்கலாம். இடவசதி இருக்கும் பட்சத்தில் இரண்டு பாத்திகளில் கீரை, புதினா, கொத்தமல்லி மற்றும் அவரைக்காய் பூசணி போன்ற கொடிவகை காய்கறிகளையும் வளர்க்கலாம்.கொடிவகை காய்கறிகளுக்கு கொடிகள் நன்கு பரவுமாறு பந்தல் அமைத்தல் முக்கியமானதாகும் அல்லது வீட்டின் மேற்கூரை மேல் பரவவிட்டும் வளர்க்கலாம்.