இப்படியும் நடக்கின்றது…ஓய்வு பெற்ற டி.ஐ.ஜியின் காரை வழிமறித்தமைக்காக வாயில் காவலனாக நிறுத்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்..!!

முன்னாள் பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஒருவரின் மகள் செலுத்திய காரை நிறுத்தியமைககாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொட்டாவ பொலிஸ் நிலைய நுழைவாயிலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஒருவரின் மகள் செலுத்தி காரை, போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக நிறுத்தியமைக்காக கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் அந்த பொலிஸ் நிலையத்தின் நுழைவாயிலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மேல் மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிற்கு, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உத்தவிட்டுள்ளார்.மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், கடந்த 15ஆம் திகதி மேல்மாகாணத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை நடந்தது.
அந்த நடவடிக்கையில் குறித்த உப பொலிஸ் பரிசோதகரும் கலந்து கொண்டார். இதன்போது, இரட்டை கோட்டை ஊடறுத்து சென்ற கார் ஒன்றை வழிமறித்தார்.காருக்கு அருகே அவர் சென்றபோது, அந்த பெண் கார் மின்விளக்குகளை அணைத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் சாரதி அனுமதிப்பத்திரத்தை உபபொலிஸ் பரிசோதகர் கேட்டபோது, “நான் டிஐஜியின் மகள். என்னை நிறுத்த நீ யார்“ என கடும் தொனியில் வினாவிவிட்டு, அங்கிருந்து வேகமாக காரை கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.இது தொடர்பாக அந்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் பதிவேட்டில் பதிவிட்டுள்ளார்.

மறுநாள், பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவரின் அலுவலகத்திற்கு குறித்த உபபொலிஸ் பரிசோதகர் அழைக்கப்பட்டார். அங்கு ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ்மா அதிபரும், மகளும் இருந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் தன்னை மிக கேவலமாக உயரதிகாரி திட்டியதாக அந்த உபபொலிஸ் பரிசோதகர் முறையிட்டுள்ளார்.பொலிஸ் பதிவேட்டின் முழுமையான குறிப்பை படிக்காமல், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜியின் தகவலை மட்டும் கேட்டு, அந்த அதிகாரி செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பின்னர் ஜூலை 16ஆம் திகதி முதல் கொட்டாவ பொலிஸ் நிலைய நுழைவாயிலில் அவர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அத்துடன் பொதுத்தேர்தலில் வாக்களிக்க செல்லவும் அவருக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.