ஒரு லட்சம் பேருக்கான அரசாங்க வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு பேரிடியாக வந்த செய்தி..!!

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களை இப்போதைக்கு கவனத்தில் கொள்வதில்லை. என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உத்தரவிட்டுள்ளதுடன், வடகிழக்கில் 8 மாவட்ட செயலகங்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலைநகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேநேரம் இந்த எண்ணிக்கையும் ஏனைய 7 மாகாணத்திற்கே பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா என்ற ஐயம் எழுப்பப்படுகின்றது.இதேநேரம், வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தேர்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதேநேரம் குறித்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 626 பேரும் , கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரும் , மன்னாரில் ஆயிரத்து 830 பேரும் , முல்லைத்தீவில் ஆயிரத்து 565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் நியிமிக்கத் தயாராக இருந்தனர். இவர்களிற்கு எதிர்வரும் 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.