இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகிய ஏழு மாதக் குழந்தை..!!

ஜா – எல பகுதியில் மட்டும் இதுவரை 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுள் ஏழு மாதக் குழந்தையும் உள்ளடங்குகின்றார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஜா – எல பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது 6 பேருக்கும், நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டபரிசோதனையின்போது ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜா – எல, சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். ஓட்டோ சாரதியான அவர் போதைப்பொருள் பாவனையாளராவார். அதையடுத்து அவரின் குடும்பத்தினரும் அவருடன் நேரடித் தொடர்புபட்ட போதைப்பொருள் பாவனையாளர் சிலரும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.எனினும், அவர்கள் அதனைப் பின்பற்றாமல் தவிர்த்து வந்ததன் காரணமாக, சோதனை நடவடிக்கையின் மூலம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.அதன் பின்னர் அவர்கள் கடற்படைக்குச் சொந்தமான ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 6 பேருக்குக் கொரோனா தொற்றுள்ளமை நேற்றுமுன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 5 பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள். மற்றவர் ஜா – எலவில் கொரோனாத் தொற்றுடன் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபரின் மனைவியாவார். இந்நிலையில், அவரின் 7 மாதக் குழந்தைக்கும் தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.ஜா – எலவில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் மருதானையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபருடன் தொடர்புபட்டவராவார்.ஜா – எலவில் இதுவரை மொத்தமாக 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.