உண்பதற்கும் மருந்திற்கும் பணமின்றி டுபாயில் உயிருக்குப் போராடும் இலங்கையர்..!!

டுபாயில் புற்றுநோயால் அவதிப்படும் இலங்கையர் ஒருவர் தமது சிகிச்சைக்கான தொகையை திரட்ட போராடி வருகிறார்.கொழும்பை சேர்ந்த குணசிறி குமரா (45) என்பவரே, தொழில் நிமித்தம் சென்று டுபாயில் புற்றுநோயுடன் சிக்கியுள்ளார்.டுபாயிலுள்ள ஹொட்டல் குழுமம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அக்ரல் மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.இதனால், கடந்த நான்கு மாதங்களாக அவரது இடது கால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டு, நடமாடவே முடியாத நிலைக்கு சென்றுள்ளார்.கொழும்பில் உள்ள மனைவியும் இரு பிள்ளைகளும் இவரது ஒரே ஒரு ஊதியத்தை நம்பி இருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நிதி நெருக்கடி காரணமாக இவரது ஊதியத்தில் 40 சதவீதம் வரை குறைத்ததால் இவரது வருவாயானது தற்போது 2,000 திர்ஹம் என குறைந்துள்ளது.மட்டுமின்றி அறை வாடகை மட்டும் ஆயிரம் திர்ஹம் என கூறும் அவர் மருத்துவ செலவுக்கும் உணவுக்கும் அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்.

தற்போது சிகிச்சைக்கான செலவு மட்டும் மாதம் 3,500 திர்ஹம் வரை தேவைப்படுகிறது என கூறும் குமர மொத்தமும் தம்முடன் தங்கியிருக்கும் நண்பர்களையே தற்போது நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்கிறார்.இதனிடையே, குமராவின் நிலை அறிந்து All Kerala Pravasi Association என்ற அமைப்பு கடந்த மே மாதம் முதல் சிகிச்சை செலவை ஏற்க முன்வந்துள்ளது.கால் பாதத்தில் மட்டுமே இருந்த புற்றுநோய் வீக்கம் உடல் முழுவதும் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.