போலி விஸாவில் வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 19 வயது இளம் பெண் கட்டுநாயக்காவில் அதிரடியாகக் கைது..!!

தவறான தகவல்களை வழங்கி போலியான முறையில் தயாரிக்கப்பட்ட விசா அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச் சீட்டுகளை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட இளம் பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 வயதுடைய இளம் பெண் இத்தாலிக்கு செல்வதற்காக முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று (16) அதிகாலை விமான நிலயத்திற்கு வந்த குறித்த பெண், சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழங்கியுள்ளார். இதன்போது இத்தாலிக்கு செல்வதற்காக வழங்கப்பட்ட விசா அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஆராய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.இதனையடுத்து, இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் தகவல்களை பயன்படுத்தி குறித்த பெண் மோசடியில் ஈடுபட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. வேறு பெண்ணின் தகவல்களுக்குள் இந்த இளம் பெண் புகைப்படத்தை மாத்திரமே மாற்றியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தகவல்களைக் கொண்டு இவர் கடவுச்சீட்டு தயாரித்துள்ள விடயமும் தெரியவந்துள்ளது. அத்தோடு விசா அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச் சீட்டுக்களில் போலி முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ள விடயமும் பின்னர் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.