மட்டு நகர் பிரபல நகைக் கடையில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல நகைக்கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நகரில் உள்ள நகைக்கடையொன்று கடந்த 02ஆம் திகதி இரவு கொள்ளையிடப்பட்டிருந்தது.இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் முறையிடப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினரும் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்திருந்தனர்.

கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்த்தனவின் ஆலோசனையின் கீழும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டீசின் வாழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராட்சியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.இதனடிப்படையில் குறித்த நகைகடையில் கடமையாற்றிய ஒருவர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் களுதாவளையில் குறித்த நகைக்கடையில் முன்னர் கடமையாற்றிய ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டன.அதனைத்தொடந்து இது தொடர்பில் கண்டியை சேர்ந்த ஒருவரும் கண்டியில் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகை தங்கங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கொள்ளை தொடர்பில் இதுவரையில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட தங்கங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தக நிலையில் கொள்ளையிடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.