காதலனுடன் இணைந்து காரில் ஹெரோயின் கடத்திய 21 வயது யுவதி..!!

ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.சிறுசிறு பொதிகளாக்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை நோக்கத்திற்காக எடுத்துச் சென்றபோது அவர்கள் சிக்கினர். பிலியந்தல, பெலன்வத்த பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சிக்கினர். 21 வயதான இளம் பெண்ணும், 23 வயதான இளைஞனுமே கைதாகினர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவென பொலிசார் தெரிவித்தனர்.அவர்கள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பெலன்வத்தையிலிருந்து கொலன்னாவவிற்கு போதைப்பொருளை எடுத்துச் சென்றபோது, மேல் மாகாண போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பெண்ணின் வீட்டில் இருந்து அண்மைக்காலமாக போதைப்பொருள் வியாபாரம் நடந்து வந்ததாகவும், கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக இளைஞன் சில காலத்தின் முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்ட பின்னர் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 28,500 ரூபா பணம், இரண்டு மொபைல் போன்கள், ஐந்து ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு கார் ஆகியவை பொலிசாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.