மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் யாழ் வலிகாமத்தில் ஆரம்பம்..!

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையினரால் சபை நிதி 10 இலட்சம் ரூபாயில் முதற்கட்டமாக ஆயிரத்து 250 மூத்த பிரஜைகளுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவிக்கும் போது; கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் மக்கள் பெரிதும் தமது இயல்பு நிலையினை இழந்துள்ளனர். இவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிகள் பலவழிகளிலும் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மேலும் முதியவர்கள், நலிவுற்றோர்களுக்கே இத்தொற்றின் பாதிப்பு உயர்வாக இருப்பதனால் முதியவர்களுக்கு விசேடமாக உதவித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என கடந்த 29ஆம் திகதி சபைக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகமுதியோருக்கான இவ்விசேட திட்டம் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதாவது, வருமுன் காப்போம் செயற்றிட்டத்தின் கீழ் முதியவர்களுக்கு சத்துணவு வழங்கும் நடைமுறை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சுகாதார வைத்திய அதியாரியின் ஆலோசனைக்கு அமைவாக முதியோர்களின் நலன்கருதி அவர்களது உடல்நலனிற்கு உகந்தவகையில் அரிசிமா மற்றும் சத்துமா என்பன வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.இதற்கமைய பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பதுடன் சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின்கீழ் பொதியிடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இதுவரை உதவிகள் எதுவும் வழங்கப்படாத மூத்த பிரஜைகள் என பிரதேச செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக செயலாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் இச்சந்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக பிரதேச செயலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 1250 மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கட்டம் கட்டமாக இச்செயற்றிட்டம் எம்மால் முன்னெடுக்கப்படும் என்பதுடன் ஏனைய பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.