இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்..!

தேநீர் அருந்தும் போது சர்க்கரைக்கு பதிலாக ஏலக்காய்களை தூளாக்கி, தேநீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு சரியான விகிதத்தில் இருந்து, சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

உடல் நலத்தை மேம்படுத்தும் மூலிகைகள் பலவற்றின் பூர்வீகமாக இந்தியா இருக்கிறது. அதிலும் இன்று வரை யாரும் அறிந்திராத பல அற்புதமான மூலிகைகள் விளையும் பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன. அப்படி மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்த ஒரு மூலிகை காய்தான் “ஏலக்காய்“.

பொதுவாக ஏலக்காயை அனைவரும் வாசனை பொருளாகத்தான் பார்க்கிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ஒரு சிலர் ஏலக்காயை விரும்பமாட்டார்கள். ஆனால் அதனின் மகத்துவத்தை புரிந்து கொண்டால் அதை விரும்பாமல் இருக்கமாட்டார்கள்.

வாகனங்களில் பயணிக்கும் ஒருசிலருக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இந்த பிரச்சினைகள் பொதுவாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், ஏன் பெரியவர்களுக்கும் கூட இருக்கலாம். இவர்கள் தினமும் 2 ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால், அதில் இருந்து விடுபடலாம். பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தவும், வாயில் உள்ள கெட்ட கிருமிகளை போக்குவதிலும், பல் இடுக்குகளில் படிந்துள்ள கரைகளை போக்குவதிலும் ஏலக்காய் முக்கிய பங்குவகுக்கிறது.

ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மல்களால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் கசாயம் தயாரித்து குடித்து வந்தால் அதில் இருந்து விரைவாக வெளிவரலாம். ஏலக்காயில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் சிலருக்கு அஜீரண பிரச்சினை ஏற்படும். இவர்கள் ஏலக்காய், மிளகை நெய்யுடன் சேர்த்து வறுத்து, அதை பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் அஜீரண பிரச்சினையில் இருந்து விடுபடலாம். பசியின்மை பிரச்சினைதான் பெரும்பாலான நோய்க்கு காரணமாகிறது. இதை தடுக்க உணவில் ஏலக்காய் எடுத்துக்கொண்டாலே போதும்.

நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி பாதிப்பு கொண்டவர்கள் தங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இனிப்பு சார்ந்த உணவுகளை குறைக்க வேண்டி இருப்பதால், தேநீர் போன்றவற்றை அருந்தும் போது சர்க்கரைக்கு பதிலாக ஏலக்காய்களை தூளாக்கி, தேநீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு சரியான விகிதத்தில் இருந்து, சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும். ஏலக்காய் நம் உடலில் தங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் ஏலக்காய்க்கு உள்ளது.

வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அனைத்து பிரச்சினைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடியாக்கி, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும்.புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். புகை பழக்கத்தை நிறுத்திய நபர்கள் பலருக்கும் மீண்டும் மீண்டும் புகை பிடிக்க தூண்டும் உணர்வு ஏற்படும். அச்சமயங்களில் சிறிதளவு ஏலக்காய்களை வாயில் போட்டு மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.