மான்செஸ்டர் டெஸ்ட் பாகிஸ்தானை தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது. இங்கிலாந்து..!!

கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ஓட்டங்களை குவித்தது. அதன்பின்னர், துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.இதனால், 107 ஓட்டங்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் தனது 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. எனினும் நேற்றைய 3ஆவது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.இதனையடுத்து 3ஆவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 137 ஓட்டங்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.இந்நிலையில், 4ஆவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்சில் 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இதனையடுத்து பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ஓட்டங்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது.இதன் பின்னர் 277 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.அதன்பின்னர் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.