ஊரடங்கு நேரத்தில் திறக்கப்பட்ட மதுபானசாலை அதிரடியாக சுற்றிவளைப்பு.!! ஒன்றாகக் கூடி மது அருந்திய சீனர்கள்.!

அரசாங்கத்தின் ஊடரங்கு சட்ட ஒழுங்குவிதிகளையும் மீறி கல்கிஸ்ஸையில் உள்ள முன்னணி விருந்தகம் ஒன்றின் மதுபானசாலையில் மதுவிற்பனை இடம்பெற்றமையை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சீனர்களுக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்கிஸ்ஸை டி சரம் வீதியில் அமைந்துள்ள இந்த விருந்தகத்தில் மது விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து மதுவரி திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றபோது சுமார் 140 சீனர்கள் அங்கிருந்துள்ளனர்.இவர்கள் கடந்த ஜனவரியில் இருந்து அங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின்போது சீன ஆண்களும் பெண்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது உள்ளூர் உரிமையாளர் குறித்த விருந்தகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு கடந்த ஜனவரியில் குத்தகைக்கு வழங்கியுள்ளார்.அன்றிலிருந்து 140 சீன பணியாளர்கள் அங்கு தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்தகத்தில் சீன தயாரிப்பு சிகரெட்டுகளும் விற்பனை செய்யப்ட்டுள்ளன.இந்தநிலையில், விருந்தகத்தின் மதுபானசாலையை சட்டரீதியாக மூடிய மதுவரித்திணைக்கள அதிகாரிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சீன முகாமையிடம் கேட்டுக்கொண்டதாக மதுவரித்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.