பிறக்கப் போகும் தமிழ் சித்திரைப் புதுவருடம்…தமிழ் மக்களிடம் விடுக்கப்படும் தயவான கோரிக்கை..!!

சித்திரைப் புதுவருடத்தினை அமைதியாக வரவேற்போம் என இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூர குருக்கள் தெரிவித்துள்ளார்.

புதுவருடப்பிறப்பு தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,தமிழ் சித்திரை புத்தாண்டான சர்வரி புது வருடப்பிறப்பானது எதிர்வருகின்ற திங்கட்கிழமை 13.04.2020 மாலை 07 மணி 26 நிமிடமளவில் இடம்பெறவுள்ளது.எனவே அடுத்த நாள் 14.04.2020 ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற காரணத்தினால் மக்கள் அதிகளவாக கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே அதனை தவிர்க்க வேண்டியது அனைவரது கடமையுமாகும்.

அதிகளவாக மக்கள் ஒரே நேரத்தில் ஆலயத்தில் கூடுவதனைத் தவிர்க்கவும். தற்கால சூழ் நிலைகளை அனைவரும் அனுசரித்து போக வேண்டிய தேவைகள் உள்ளன.எனவே முடிந்த வரை உங்கள் குல தெய்வங்களை வணங்கி அமைதியாக கொண்டாடுங்கள். ஆலயங்கள் எந்த குறைவுமின்றி பூஜைகள் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.எமது செயற்பாடுகள் அதனை குழப்புவதாக அமைந்து விடக்கூடாது. எனவே கால தேச வர்தமானங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.எனவே அமைதியான முறையில் இப்புதிய வருடத்தினை வரவேற்றுக் கொள்ளுங்கள் எனவும் கோரியுள்ளார்.