சசிகலா ரவிராஜ் வீட்டிற்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜ் தரப்பு கூறியது. இது சர்ச்சைக்குரிய விடயமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சசிகலாவிற்கு ஆதரவாக, தென்மராட்சியிலுள்ள ரவிராஜின் சிலைக்கு அருகில் போராட்டம் நடந்து வருகிறது. அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்கமாக போர்க்கொடி தூக்காமல் சசிகலா தரப்பும் மௌனம் காத்து வருகிறது.இந்த நிலையில், இன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தரப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் சசிகலாவின் வீட்டுக்கு சென்று பேசினர். அவரை சட்டநடவடிக்கைக்கு செல்லும்படியும், சட்ட நடவடிக்கை உதவி செய்வதாகவும் தெரிவித்தனர்.இதன்பின்னர், ஊடகங்கள் புடைசூழ அங்கஜன் இராமநாதனும், சசிகலா வீட்டிற்கு சென்று பேசினார்.