நாட்டின் பல பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை…பொதுமக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை..!

பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இதுதொடர்பில் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும், கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டுமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.