9ஆவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் நிறைவு… நாடு முழுவதிலும் 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு.!!

இலங்கை சோசலிசக் குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்துக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. 12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்ததாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்நிலையில் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு பாதுகாப்புடன் சற்றுநேரத்தில் எடுத்துச்செல்லப்படவுள்ளன.இதேவேளை, இன்றைய வாக்களிப்பு நடவடிக்கைகளின்போது 758 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் பாரியளவிலான வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் வாக்கு பதிவு நடவடிக்கைள் நிறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.மேலும், இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.அத்தோடு, பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேசிய தெர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதற்கமைய 70 ஆயிரம் பொலிஸார் மற்றும் 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.