இலங்கையின் 16வது பாராளுமன்றத் தேர்தல் இன்று..(முழு விபரங்களும் உள்ளே.)

9வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுத்தேர்தல் இன்று (5) இடம்பெறுகிறது.நாடு முழுவதுமுள்ள 12,984 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி வரை மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் வாக்காளர்கள் தமது வாக்கை அளிக்கலாம். வாக்குரிமையுள்ள ஒவ்வொருவரையும் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.இம்முறை 75-80 வீதமான வாக்குப்பதிவு இடம்பெறுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் 100 சதவீதம் பாதுகாப்பானவை. வாக்காளர்கள் வந்து வாக்களிக்க அஞ்சக்கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசபிரிய நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.

கொரோனாவிற்கு பின்னரான சவாலான காலகட்டத்தில் இடம்பெறும் தேர்தல் என்பதால் பல முன்னாயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் முகக்கவசங்கள், கையுறைகள், சுத்திகரிப்பாளர்கள் மற்றும் வெப்ப அளவீட்டு கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 10 பில்லியன் ரூபா தேர்தலிற்கு செலவிடப்படுகிறது.தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த வெளியேறி வீடுகளில் 14 நாள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை வாக்களிக்கலாம்.வாக்களிக்க செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முடியுமானவரை கறுப்பு அல்லது நீல நிற பேனை கொண்டு செல்ல வேண்டும்.ஆளடையாளத்தை உறுதிசெய்ய தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அரசு ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டை, பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஆட்களை பதிவு செய்வதற்காக திணைக்களம் வழங்கிய மதகுருமார்கள் / பூசாரி அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, நபர்களை பதிவு செய்வதற்கான திணைக்களத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சிறப்பு அனுமதி ஆகியவற்றில் ஏதாவதொன்றை வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தேசியஅடையாள அட்டைக்கு கூடுதலாக தங்கள் பாஸ்போர்ட்டையும் கொண்டு செல்ல வேண்டும்.வாக்களிக்கும் போது, வாக்குச்சீட்டில் x அடையாளத்தை மட்டுமே பாவிக்க வேண்டும்.இந்த தேர்தலில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 3,652 வேட்பாளர்களும், மீதமுள்ளவர்கள் சுயேட்சை குழுக்களிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது. ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென அப்பொழுது அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் மார்ச் 12-19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா வைரஸை அடுத்து தேர்தல் திகதி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்தல் பிரச்சாரங்களில் வரையறைகள் இருந்தன. எனினும், நாடு முழுவதும் விருப்பு வாக்கு விவகாரத்தால் மோதல்கள் நடந்தன.முறைகேடுகள் அல்லது தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியிருந்தால் எந்தவொரு பிரதேசத்தின் முடிவுகளையும் இரத்து செய்ய ஆணைக்குழு தயங்காது என்று ஆணைக்குழு தலைவர் கூறினார்.வாக்குச்சீட்டு மோசடி அல்லது வேறு எந்த தேர்தல் மோசடிக்கும் இடமில்லை என்று அவர் உறுதியளித்தார். மேலும் “கடமையில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு பற்களைத் துலக்குவதற்கு அல்ல, தேவைப்பட்டால் பயன்படுத்தவும் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன” என்றும் கூறினார்.

இன்று புதன்கிழமை வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, இரவில் அவற்றிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். சுமார் 200,000 அரச ஊழியர்கள், 8,000 சுகாதார ஊழியர்கள் மற்றும் சுமார் 69,000 காவல்துறையினர் பணியில் இருப்பார்கள்.தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான அமைதியான மற்றும் உகந்த சூழல் நேற்று வரை நிலவியது. தேர்தலுக்கு முந்தைய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

PAFFREL மற்றும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் (CMEV) மற்றும் முக்கிய இரண்டு உள்ளூர் கண்காணிப்பு குழுக்கள் நாடு முழுவதும் கள பார்வையாளர்களை நிறுத்தியுள்ளன. CMEV சுமார் 3,000 பார்வையாளர்களை நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாஃப்ரெல் சுமார் 4,000 பார்வையாளர்களை நிறுத்தியுள்ளது.COVID-19 உலகளாவிய தொற்றுநோயால் இந்த ஆண்டு வெளிநாட்டு பார்வையாளர்கள் வரவில்லை. இருப்பினும், தற்போது நாட்டில் உள்ள வெளிநாட்டினர் உட்பட ஆறு தன்னார்வலர்கள் ஆசிய சுதந்திர வலைப்பின்னலுக்கான (ANFREL) தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

திங்களன்று நிலவரப்படி, தேர்தல் ஆணைக்குவிற்கு 6,932 தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள் பதிவாகின. ஆனால் குறிப்பாக தேர்தல் வன்முறைகள் குறித்து எந்த முறைப்பாடும் இல்லை.இன்று வாக்களிப்பு முடிந்ததும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணப்படும். நாளை நண்பகல் அளவில் முதலாவது முடிவு வெளியாகும். நள்ளிரவிற்குள் இறுதி முடிவு வெளியாகும். விருப்பு வாக்கு விபரங்கள் நாளை மறுநாளே வெளியாகும்.இலங்கை பொதுஜன பெரமுனா முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் சுமார் ஒன்பது கட்சிகளுடன் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியது.ஆனாலும், சுதந்திரக்கட்சி கை சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, நுவரெலியா, களுத்துறை மாவட்டங்களில் போட்டியிடுகிறது.சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால பொலன்னறுவை மாவட்டத்திலும், பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச குருணாகல் மாவட்டத்திலும் போட்டியிடுகிறார்கள்.ஐ.தே.க தனித்து யானை சின்னத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி தனித்து ரெலிபோன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். சஜித் இம்முறை ஹம்பாந்தோட்டையை விட்டு, கொழும்பில் போட்டியிடுகிறார்.அனுர குமார திஸ்நாயக்க தலைமையிலான ‘ஜனதா விமுக்தி பெரமுன’ (ஜே.வி.பி) பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து போட்டியிடுகிறது. இது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உருவாக்கப்பட்ட அதே கூட்டணியாகும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் “வீடு” சின்னத்தில் போட்டியிடுகிறது. புதிய மாற்று சக்தியாக உருவாகியுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுகிறது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகிறது.யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க சுயேட்சை அணிகளாக மாம்பழம் சின்னத்தில் ஐங்கரநேசனும், கேடயம் சின்னத்தில் மு.சந்திரகுமாரும் போட்டியிடுகிறார்கள்.புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி கூடும்.1946 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறும் 16வது பொதுத்தேர்தல் இதுவாகும்.

நாடாளுமன்ற தேர்தல் 2020:வாக்களிப்பு நேரம்: காலை 7 மணி- மாலை 5 மணி
வாக்காளர் எண்ணிக்கை: 16,263,885,தபால்மூல வாக்காளர்கள்: 705,085
முதற்தடவை வாக்காளர்கள்: 264,789,தேர்தல் மாவட்டங்கள்: 22,வாக்களிப்பு நிலையங்கள்: 12,984.வாக்கெண்ணும் மையங்கள்: 2,820,அரசியல்கட்சிகள்: 40, தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்: 400,000(பொலிஸ், சுகாதாரத்துறை உள்ளடங்களாக)தெரிவு செய்யப்படும் எம்.பிக்கள்: 196,தேசிய பட்டியல் நியமனம்: 29